திங்கள், 29 அக்டோபர், 2012

இரக்கம் என்றால் என்ன சரவணா....?


புதுக்கவிதை:      இரக்கம் என்றால் என்ன சரவணா.....?                    
                     வே.ம.அருச்சுணன் –மலேசியா 
சரவணா.....!
நேற்று உயிருடன் இருந்தாய்
ஆனால்,
இன்று நீ உயிருடன் இல்லை.....!
அதற்கு எமன் காரணம் என்றால்
இரக்கமுள்ள என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது....!

உயிருக்குப் போராடினாயே
இறுதிவரை மரணப் போராட்டம் நடத்தினாயே
வாழ்வில் அனுபவிக்காதக் கொடும்   
வலியால் துடிதுடித்தாயே
காப்பாற்றுங்கள் என்று கதறினாயே
காப்பாற்றுவார்கள் என்று
உயிர் போகும் வரை நம்பினாயே......!
ஆனால்,  
நீ கொடுரமாய்க் கொல்லப்பட்டாய்....!

ஈழமண்ணில்
நம்மினம் கொடுமையாய்க்
கொல்லப் பட்டக் காட்சியை
தொலைக்காட்சியில் உலகமக்கள்
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்களே.....!

அதன் தொடரோ உன் வாழ்வு.....?
முப்பதுக்கும் மேற்பட்டோர்
மௌனிகளாய் விரதம் பூண்டு நின்றார்களே
இரக்கத்தைத் துறந்தவர்களாய்
மனிதநேயத்தைச் சவக்குழியில்
புதைத்தவர்களாய்  
வாழவேண்டிய உன்னை
பதினான்கு வயதிலேயே
 பரலோகம் அனுப்பிவிட்டார்களே.....?

கொன்றவர்கள் பாவிகளல்ல
மல்யுத்தக் காரணாய்
உன்னை வேடிக்கைப் பார்த்தார்களே
அவர்கள் மன்னிக்க முடியாதப் பாவிகள்....!

உன் இறப்பு
உலகுக்குப் பாடமாகிப் போனதே.....!
இந்த உலகில்
மனிதம் மறைந்து
வெகு நாளாகிப் போனது உண்மை......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக